மும்பை:

ன்முறையை தூண்டும் பப்ஜி விளையாட்டை தடை செய்யக்கோரி குரல்கள் உயர்ந்துள்ள நிலையில், மும்பையில்  பப்ஜி விளையாட  பெற்றோர் போன் வாங்கி தர மறுத்ததால், 18 வயதுடைய வாலிபர்,  ஒருவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, வன்முறையை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். போர்க்களத்தில் போராடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள  இந்த விளையாட்டில், ஒரே நேரத்தில் முகம் தெரியாத  பலர் இணைந்து விளையாடலாம்.  இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.

ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, புளுவேல் விளையாட்டு குறித்து மக்களிடையே மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட விழிப்புணர்வு காரணமாக சற்று ஓய்த நிலையில், தற்போது பப்ஜி விளையாட்டு இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த ஆன்லைன் விளையாட்டு காரணமாக, பலர் தேர்வுகளில் கோட்டை விட்டு விடுவதாக பெற்றோர்கள் குறை கூறி, பப்ஜியை தடை செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் பப்ஜி விளையாட்டை தடை செய்யுமாறு 11 வயதுடைய மாணவன், தனது தாயின் உதவியோடு மும்பை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளான்.

இந்த நிலையில், மும்பை நேரு நகரில் உள்ள குர்லா பகுதியில் 18 வயதுடைய வாலிபர் ஒருவர், தனது  பெற்றோரிடம் பப்ஜி கேம் விளையாடுவதற்காக  விலை உயர்ந்த செல்போன் வாங்கித் தரும்படி நச்சரித்து வந்துள்ளார். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்த நிலையில்,  அந்தவாலிபர், வீட்டின் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில், கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பப்ஜி விளையாட்டுக்காக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.