சென்னை

இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி  3 நாள் பயணமாக ஊட்டி செல்கிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றியும், இந்திய மொழிகள் மூலம் பாடங்களைக் கற்றுக்கொடுக்க வழிவகை செய்யும் திட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு செல்ல உள்ளார். அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்குக் கோவை விமான நிலையம் சென்றடைகிறார். பிறகு அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு மாலை 6.15 மணிக்குச் செல்கிறார். அங்கு ஆளுநர் இரவு ஓய்வு எடுக்கிறார்.

நாளை வெள்ளிக்கிழமை ஊட்டி அருகே முத்தநாடு மந்து பகுதியில் வசிக்கும் தோடர் இன மக்களை ஆளுநர் சந்தித்து பேசுகிறார். நாளை மறுநாள் (சனிக்கிழமை) சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது  வரும் 18 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் ஊட்டி ராஜ்பவனில் இருந்து ஆளுநர் புறப்பட்டு கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

ஆளுநர் வருகையையொட்டி நீலகிரியில் 400 காவல்துறையினர்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இங்கு ராஜ்பவன், அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.