சென்னை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று (25ம் தேதி) திருப்பதி ஏழுமலையான், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை உள்பட பெரும்பாலான கோவில்களின் நடை மூடப்படுகிறது.
இன்று மாலை ( 25-ந் தேதி செவ்வாய் கிழமை) பகுதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 6.23 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இந்தியாவில் பெரும்பாலான இந்து கோவில்களின் நடை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை இன்று காலையே மூடப்பட்டது. சூரிய கிரகணம் காரணமாக காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதுபோல தமிழ்நாட்டிலும் பிரபலமான கோவில்களில் இன்று மாலை நடை அடைக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் சுவாமி மூலஸ்தானத்தில் நடை சாத்தப்படும். அந்த நேரத்தில் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கந்த சஷ்டி விழா நடைபெறும் முருகன் கோவில்களில் இன்று பிற்பக்ல 4மணி முதல் 7மணி வரை நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய கோவில்கள் இன்று மூடப்பட்டுள்ளன,.