டில்லி
இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்க்கும் மனு விசாரணைக்கு வருகிறது.
செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராகவும் நீடிக்கிறார். எனவே எந்த தகுதியின் அடிப்படையில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு வழக்கறிஞர் எஸ்.ராமச்சந்திரன், அ.தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஜெயவர்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கூறியதுடன், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து முதல்-அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இன்று இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.