ராமேஸ்வரம்

ன்று மகாளய அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் பொது மக்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

அண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது மறைந்த முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. மேலும் ஆடி, தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்காகப் பொதுமக்கள் நீர்நிலைகளில் குவிந்தனர். குறிப்பாக தஞ்சை, நாமக்கல், கடலூர், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

மேலும் திருச்சி- ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிக் கரையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபட்டனர். தஞ்சையில் கும்பகோணம் மகாமக குளம், காவிரி படித்துறையில் அதிகாலை முதல் தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை கடலில் புனித நீராடி திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதைப் போல் திருவள்ளூர் மாவட்டம் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளக்கரையில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

இன்று விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஏராளமான பக்தர்கள மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.  மகாளய அமாவாசையையொட்டி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.

 

[youtube-feed feed=1]