சென்னை

ன்று மாலை தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

 

முந்தைய ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.  இதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க தற்போது தேர்தல்கள் நடைபெற உள்ளது.  இந்த தேர்தல் வரும் 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 27,003 இடங்களில் நடைபெற உள்ளன.  இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது.  இன்று மாலை 5 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது.

நேற்று வரை மட்டும் உள்ளாட்சி  பதவிகளுக்கு 54,299 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  இன்றும் பலர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.  மொத்தமாக ஒரு லட்சத்துக்கும், அதிகமானோர் மனுத் தாக்கல் செய்திருக்க வாய்ப்புள்ளது. இந்த வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது.  மனுக்களைத் திரும்பப் பெற செப்டம்பர் 25ஆம் தேதி கடைசி தினமாகும்.