சென்னை

ன்று தமிழக அமைச்சர் நேரு கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.

திமுக சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.  இன்று காலை 4 மணிக்கு மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்கியது.

தமிழக அமைச்சர் கே.என். நேரு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி 4 பிரிவுகளில் (5 கி.மீ, 10 கி.மீ, 21 கி.மீ, 42 கி.மீ) நடைபெறுகிறது. இந்த அனைத்து பிரிவுகளும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் தொடங்கி, தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைகிறது.

கருணாநிதி நினைவிடம் அருகில் தொடங்கிய மாரத்தான் போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடைபெறுகிறது.  போட்டியில் சுமார் 73 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடைய உள்ளது.

இதில் 42 கி.மீ. மற்றும் 21 கி.மீ. பிரிவில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. 10 கி.மீ. பிரிவில் தலா ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ. 15 ஆயிரமும், 5 கி.மீ. பிரிவில் ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளது.

போட்டியின் தொடக்க விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் உள்படப் பலர் கலந்துகொண்டனர். இந்த மாரத்தான் போட்டிக்காகச் சென்னை மெரினா, காமராஜர் சாலை உள்பட பல இடங்களில் போக்குவரத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.