சென்னை
இன்று சென்னை மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்குவதாக அறிவித்துள்ளது.
நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெஞ்சல் புயலின்போதும் மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம்போல் சனிக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,
“இன்று சனிக்கிழமை கால அட்டவணையின்படி மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும்”
என்று தெரிவித்திருந்தது.
இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்,
“மெட்ரோ ரெயில் சேவைகள் தாமதம் இல்லாமல் வழக்கம்போல் தொடங்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக, அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் தங்கள் வாகனங்களை இன்று முதல் கோயம்பேடு மெட்ரோ, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ நிலையங்களில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 425 1515, மகளிர் உதவி எண் – 155370 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்”
என்று தெரிவித்துள்ளது.