சென்னை
தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கடந்த 20 ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிஉள்ளது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
மழைக்காலங்களில்தான் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். சாலைகள் மற்றும் வீடுகளை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகி இதன் மூலம் மலேரியா, டெங்கு, காலரா போன்ற நோய்கள் ஏற்படும். மேலும் சேற்றுப்புண் மற்றும் சளி நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
எனவே டெங்கு, மலேரியா, காலரா போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு இன்று 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நவம்பர், டிசம்பர் மாதங்களில் உள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் சுமார் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.
அந்த அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. முகாம்களில் மழைக்கால நோய்கள் குறித்த பரிசோதனைகள், மருத்துவச் சிகிச்சை உதவிகள் வழங்கப்பட உள்ளன.