ம.பொ.சி. பிறந்த நாள் (1906)
ம.பொ.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் ம. பொ. சிவஞானம் விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பிறகு அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். அப்போது பல்வேறு நூல்களை படித்தார். எழுத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.
31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள்.
பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே, 1946 ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட் 8, 1954 ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார்.
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை தக்கவத்தார். . திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால்திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியின் கொடி,’கடல்,கப்பல்,மூன்று சிங்கங்கள்,இரண்டு மீன்கள்’ கொண்டதாக இருந்தது. மூன்று சிங்கங்கள் பிரிட்டிஷ் அரசாங்க சின்னமாகும்.கடல்,கப்பல், மீன்கள் சென்னை கடற்கரைபட்டினம் என்பதைக் காட்ட சேர்க்கப்பட்டவை.நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச்சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது.இதற்கான குழுவில் இருந்த ம.பொ.சி தனது தமிழரசு கழகத்தின் கொடியில் இருந்த சேர,சோழ,பாண்டியரின் சின்னமான ‘வில்,புலி, மீன்’ சின்னங்களை சென்னை மாநகராட்சி கொடியிலும் பொறிக்க பரிந்துரைத்தார். இன்று வரை ம.பொ.சி பரிந்துரை செய்த ‘வில்,புலி, மீன்’ அடங்கிய கொடியே,சென்னை மாநகராட்சியின் கொடியாக திகழ்கிறது
இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுடைய ம.பொ.சி., பாரதியை பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தின் புகழை முதல் பரப்பிய பெருமை ம. பொ. சியை சாரும். இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார். ரா. பி. சேதுப்பிள்ளை மூலம் ‘சிலம்பு செல்வர்’ என்னும் பட்டம் பெற்றார்.
1950 ல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சியின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைப்பெற்றது.ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க,டாக்டர் மு.வரதராசனார் தலைமை வகித்தார்.பெருந்தைலவர் காமராஜர் உட்பட அனைத்து கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர்.ம.பொ.சி எதிர்பார்த்ததை போல சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ் கலாச்சார விழாவாக மாறியது.அடுத்த ஆண்டு முதல், ம.பொ.சி தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர்.
வ. உ. சிதம்பரனார் , வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி.தான். இவர்களைப் பற்றி ம.பொ.சி எழுதிய நூல்களின் அடிப்படையிலேயே ‘கப்பலோட்டிய தமிழன்’, “வீரபாண்டிய கட்டபொம்மன்” ஆகிய படங்களை பி.ஆர். பந்துலு இயக்கினார்.
திருவள்ளுவர் இராமலிங்க அடிகளார் பற்றியும் நூல்கள் எழுதியிருக்கிறார் வ.உ.சி.
1995ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி மறைந்தார்.