டில்லி

ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்கி நிறுவனத்தை நடத்த விலைப்புள்ளி அளிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் அதிகரித்ததால் நிதி நெருக்கடியில் சிக்கியது. அதை ஒட்டி நிறுவனம் தனது சேவைகளை குறைத்தது. ஊழியர்களுக்கு தர வேண்டிய ஊதிய பாகியையும் தர இயலாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தினசரி நிர்வாக செலவுகளுக்கும் பணம் இல்லாத நிலை ஏற்பட்டதால் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் தனது சேவைகள் அனைத்தையும் ஜெட் ஏர்வேஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதை ஒட்டி கடன் அளித்த நிதி அமைப்புக்கள் அதிக அளவில் கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் ஒருங்கிணந்தன. இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்று வேறொரு நிறுவனம் மூலம் சேவைகளை தொடங்க முடிவு எடுத்தன. கடந்த மாதம் 12 ஆம் தேதி, அதாவது நிறுவனம் தனது சேவையை முழுவதுமாக நிறுத்தும் முன்பு ஸ்டேட் வங்கி 4 நிறுவனங்களை இறுதிப் பட்டியலில் வைத்திருந்தது.

அந்த நிறுவனங்கள் எதிஹாட் ஏர்வேஸ், டிபிஜி கேபிடல், இண்டிகோ பார்ட்னர்ஸ் மற்றும் தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதி ஆகியவை ஆகும். ஆனால் இந்த நிறுவனங்கள் எதுவும் தனது இறுதியான முடிவை அறிவிக்காமல் உள்ளன. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன அமைப்பாளர் நரேஷ் கோயலுக்கு தொடர்புள்ள அடிக்ரோ ஏவியேஷன் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்க முன் வந்துள்ளது. அடிக்ரோ நிறுவனத்தை பிரிட்டன் தொழிலதிபர் ஜேசன் அன்ஸ்வொர்த் நடத்தி வருகிறார்.

அத்துடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் குழுவும் பாரத ஸ்டேட் வங்கியிடம் தாங்கள் இந்த நிறுவனத்தை எடுத்து நடத்த விரும்புவதாகவும் அதற்காக ரூ.7000 கோடி வரை நிதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்டேட் வங்கி இறுதிப்பட்டியலில் உள்ள நிறுவனங்களின் இறுதி முடிவுக்கு காத்திருப்பதாகவும் அது வரவில்லை எனில் மற்றவைகளை கருத்தில் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறது.

கடந்த மூன்று வாரங்களாக சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுத்தி விட்டதால் அந்த சேவைகள், ஊழியர்கள் உள்ளிட்டவைகளை போட்டி நிறுவனங்கள் பங்கிட்டுக் கொண்டுள்ளன. தற்போது இந்த நிறுவனத்தை நடத்த முன் வருவோர் வங்கிகளுக்கு ரூ.8000 கோடி கடன் பாக்கி, மற்ற கடன்களுக்கு ரூ. 1000 கோடி மற்றும் ஊதிய பாக்கி ஆகியவைகளை செலுத்த வேண்டி வரும்.

இன்று ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள் வாங்கி மீண்டும் நடத்த விலைப்புள்ளி அளிக்க வேண்டிய கடைசி தினமாகும். இன்று இறுதி நேரத்துக்குள் வரும் விலை புள்ளிகளைக் கொண்டு விரைவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பது தெரிய வரும்.