இன்று ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் சவுகார் பேட்டை உள்பட பல பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும்,வண்ணம் கலந்த நீரை பீய்ச்சி அடித்தும் வண்ணமயமாக ஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமாக, அரங்கபஞ்சமி தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலங்களை சேர்ந்த இந்து சமயத்தினரால் ஹோலி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையின் முக்கிய நோக்கம், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே.
பங்குனி மாதம் பவுர்ணமி அன்று கொண்டாடப்படும் இந்த பண்டிகை கொண்டாட புராண காரணங்களும் சொல்லப்படுகின்றன.
இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவருக்கொருவர், வண்ண நீரை குழாயில் அடைத்து ஒருவர் மீது மற்றவர் பீய்ச்சி அடித்தும், பல வண்ண நிறங்களில் உள்ள கலர் பொடிகளை ஒருவருக்கொருவர் பூசியும் ஆட்டம் பாட்டத்துடன் தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
அதே நேரத்தில் இந்த ஹோலி பண்டிகை காதலை வெளிப்படுத்தக் கூடிய பண்டிகையாகவும் கொண்டாடப்படு கிறது. தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
ஹோலி பண்டிகையையொட்டி, வட மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. டில்லியில், ஹோலி பண்டிகையின்போது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதைத் தடுக்கவும், இரு சக்கர சாகச பயணத்தை நிறுத்தவும், வாகனப் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.