இன்று பொங்கல் பண்டிகை – உழவர் திருநாள்!

Must read

மிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகச்சிறந்தது பொங்கல் திருநாளாகும். இதை உழவர் திருநாள் என்றும், அறுவடை திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.

தை மாதத்தின் முதல் நாளான இன்று  உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நல்ல மழை பெய்யவும் நாடு செழிக்கவும், தை மாதம் முதல் தினத்தில் பொங்கலிட்டு இயற்கையை வழிபடுவார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி சூரியன் உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.

இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.

உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

விளைந்த புது நெல்லைக் குத்தியெடுத்து புத்தரிசியைக் கொண்டே பொங்கலிட வேண்டும் என்பது சம்பிரதாயம்.

ஆனால் இன்று நகரங்களில் வசிப்போர்க்கு இது சாத்தியமான தொன்றல்ல. எனினும் யாவரும் பொங்கற் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். கரும்பு மஞ்சள் இஞ்சி போன்று தாம் பயிரிட்டவற்றையும் பிடுங்கி மண் கழுவித் தூய்மை செய்து கொத்தாக வைத்துப் படையலுடன் வழிபடுவதும் நடைமுறையில் இருந்து வந்தது.

இவ்வழக்கம் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதை நாம் இப்பொழுது அவதானிக்கலாம். எனினும் பழவகைகளையும் கரும்பு இஞ்சி போன்றவற்றையும் தேடி வாங்கிப் படைக்கும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது.

பண்டிகைகளே ஒரு இனத்தின் கலாச்சார பேணிக் காப்பன என்பது மிகையாகாது. ஒவ்வொரு பண்டிகையிலும்  ஒரு சமுக நோக்கு இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

உழைப்பின் உயர்வை எடுத்துக் கூறும் திருநாளாகவும் இது விளங்குகிறது.

தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்பது பழமொழி. அதுபோல் தை மாதத்தின் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாப்படுகிறது. இதனை உத்தராயண புண்ணியகாலத் தொடக்க நாளாகவும் கொள்வர்.

இந்துக்களின் பண்டிகைகள் ஆன்மிகம் மட்டுமின்றி அறிவுக்கும் விருந்தளிப்பதாகவே இருக்கும். அறிவு மட்டுமே மனிதனின் வாழ்க்கையை சிறப்படைய செய்துவிடாது. மனிதனின் தேவைகள் அனைத்தும் நிறைவு பெற வேண்டும். அதற்கு தேவை உழைப்பு. அவ்வுழைப்பின் உயர்வை எடுத்துக் காட்டும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை அமைகிறது.

தேவைகளுள் அடிப்படையான தேவைகள் – உணவு உடை உறைவிடம் என்பர். அவற்றில் எல்லாம் தலையாயதும் அதி அத்தியாவசியமுமானதும் உணவுத் தேவையேயாகும்.

அவ்வுணவை உற்பத்தி செய்யும் உழவர் திருநாளாக- உழைப்பின் திருநாளாக- இப்பண்டிகை போற்றப்படுவது மிகப் பொருத்தமேயாகும்.

நிலமும் விதையும் மாடும் மட்டும் இருந்து விட்டால் விவசாயம் செய்து விட முடியுமா?

நீரும் வெயிலும் இன்றியமையாதன பயிர்வளர்சிக்கு. அந்த நீரைத் தருவது மழை. ஆனால் அந்த மழையைத் தருவது யார்?

ஆறு குளம் கடல் போன்ற நீர் நிலைகளிலுள்ள நீரை ஆவியாக்கி மேலேளச் செய்து அங்கிருந்து மழையாகப் பெய்யச் செய்து வளம் தருபவன் சூரியனே.

இதனை உணர்ந்த மக்கள் அச் சூரியதேவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நாளாகப் பொங்கலிட்டு வழிபாடு செய்யும் நாளாக இப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.

இத்தினத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பதால் மகர சங்கிராந்தி என புண்ணிய தினமாகவும் இது கொண்டாப்படுகிறது. வட மாநிலங்களில் மகர சங்கிராந்தி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article