டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 92-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் தியாகத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திகாயத், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது தொடர்பாக எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம் என்று விவாசயிகளிடம்கூறினார். கடந்த முறை டிராக்டர் பேரணியில், 4 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்றதாகவும், இம்முறை நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் 40 லட்சம் டிராக்டர்களை கொண்டு செல்ல வேண்டும் என்றும் விவசாயிகளை அவர் கேட்டுக்கொண்டார். மேலும், இந்தியா கேட் அருகே உள்ள பூங்காக்களை உழுது அங்கு விவசாயம் பயிரிட இருப்பதாகவும் ராகேஷ் தியாகத் தெரிவித்தார்.