சென்னை: உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை கிரிம்ஸ்ரோடு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 5வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே மக்கள் பணியாற்றி வருகிறார்.

திடீர் தலைச்சுற்றல்காரணமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்து கொண்டு, மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு அப்போலோ கேன்சர் மருத்துவமனையிலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஜுலை 34) அவருக்கு ஆஞ்சியோ சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்வர் G.செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள்” என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் மேலும் சில தினங்கள் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.
இதற்கிடையில், இதனிடையே அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கூட இருந்து கவனித்து வருகின்றனர். முதலமைச்சரின் சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு சந்தித்து பேசினார்கள். துணைமுதல்வர் உதயநிதி உள்பட அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஏ.கே.விஜயன் என பல அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் முக்கிய அதிகாரிகள் அவரை சந்தித்து பேசினர்.
இந்த நிலையில், இன்று 5வது நாளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும் வழக்கம்போல மக்கள் பணியாற்றி வருகிறார். தலைமைச்செயலாளர் முருகானந்தம் உள்பட முக்கிய அதிகாரிகளை அழைத்து, ஆலோசனை நடத்தி வருவதுடன், சட்டம் ஒழுங்கு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் கேட்டறிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.