டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு கண்டித்து, தமிழக விவசாயிகள் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று 4வது நாளாக நடைபெறுகிறது. இன்றைய போராட்டம் கை தட்டி ஓசை எழுப்பி நூதன போராட்டமாக நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4வது நாளாக நீடிக்கிறது.

காவிரி பிரச்சினையில் மோடி அரசு கண்டுகொள்ளாததை, நினைவுபடுத்தும் வகையில், இன்று கை தட்டி ஓசை எழுப்பி போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூங்கிக்கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசை எழுப்பும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுவதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

டில்லியில் நடைபெற்று வரும் இந்த தொடர் உண்ணாவிரதப் போரட்டத்தில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.