சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு உள்ளதாக அமைச்சர் துரைமுரகன் கூறியுள்ளார்.

திடீர் தலைசுற்று என சென்னை அப்போலோவில்அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 4வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அப்போலோ கேன்சர் மருத்துவமனையிலும் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த திங்கட்கிழமை காலை வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்து கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மருத்துவமனையில் இருந்தே அரசு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். தலைமைச்செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடி வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினை, துணைமுதல்வர் உதயநிதி உள்பட தமிழக அமைச்சர்கள் அவரை சந்தித்து நலன் விசாரித்து வருகின்றனர். இன்று 4வது நாளாக அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினை மூத்த அமைச்சர் துரைமுருகன், துணைமுதல்வர் உதயநிதி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமோடு இருக்கிறார் என கூறினார்.
Patrikai.com official YouTube Channel