அறுபடை முருகனுக்கு உகந்த நாளானதைப்பூசத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் வீட்டிலிருந்தே முருகனை வழிபட்டு வருகின்றனர்.
முருகப் பெருமானுக்கு உகந்தநாள் தைப்பூசம்… தைமாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம். தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் இதுவும் ஒன்று. முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருநாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் பக்தர்கள் வீடுகளில் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.
அதுபோல, சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம். இந்த வகையில் தைப்பூசம் சிவசக்திக்கு உரிய நாள் ஆகிறது. இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனி முருகன் கோவிலில் மட்டும் இந்த விழா பிரசித்தம். தைப்பூசத் திருநாளில் சிவன் பார்வதி இணைந்து ஆடுவதாக சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதை பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். திருஞான ஞானசம்பந்தர் அங்கம் பூம்பாவையைத் திருப்பதிகம் பாடி உயிரோடு எழுப்பிய அற்புதம் நடைபெற்றது தைப்பூச நன்னாளில்தான்.
ஞானப்பழம் கிடைக்காத கோபத்துடன் ஆண்டிக்கோலம் பூண்டு தங்கிவிட்டதாக கூறப்படும் இடம் மூன்றாம் படை வீடான பழனி. அதனால் பழனியில் தைப்பூசம் விழா மிகவும் பிரசித்தம். தைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகன் கோவில்களுக்கு காவடி எடுத்தும், பால்குடம் ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதனால் தங்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுவதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை என்பர். அம்மையப்பரான சிவபார்வதி மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக் குழந்தை முருகன். அந்தவகையில் பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூச திருநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.
முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப் பூச திருநாளில் முருகன் குடியிருக்கும் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி சுமப்பது, வேல்குத்துதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் செய்வது பக்தர்களின் வழக்கம். இந்நாளில் வேண்டி வழிபடும் அன்பர்கள் கல்வி, செல்வம், ஞானம் மூன்றிலும் சிறந்து விளங்குவர் என்பது ஐதிகம்.
பூச நாளில் புனித நீராடி ஈசனைப் பணிவது தென்னக மக்களின் வழக்கம் என்பதை ‘பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே’ என்று பெருமையோடு கூறுகிறார் திருநாவுக்கரச பெருமான். திருவிடைமருதூரில் தைப்பூச நாளில் புனித நீராடுவதன் பெருமையை சம்பந்தரும் பாடியுள்ளார்.
பூச நட்சத்திரம் குரு பகவானுக்கு உரியது என்பர். ஆலமர் செல்வனாம் தென்முகக் கடவுள் ஈசனுக்கே குருவாக அருளியவன் முருகப்பெருமான். எனவே இந்நாளில் முருகனை வழிபடுவது குருவின் அருளைப் பெற்றுத்தரும்.
தைப்பூசம் விழா தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரியஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் உள்ள தமிழர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.