நெட்டிசன்
சஞ்சய் காந்தி பிறந்த தினம்: 14-12 1946
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அரசியல்வாதி ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர், அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார்.
சஞ்சய், தனது மூத்த சகோதரர் ராஜீவ் காந்தியுடன், 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை வெல்ஹாம் சிறுவர் பள்ளியில் படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றார். சஞ்ஜய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். மீதமிருந்த 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, புனித கொலம்பஸ் பள்ளி, டெல்லியில் பயின்றார். சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை.
ஆனால் இங்கிலாந்தில் க்ரூ (Crewe) என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிபயில்பவராகச் சேர்ந்தார். அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். அவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டித் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்ஜய் தனது அன்னையின் அருகில் இருக்க முடிவெடுத்தார்.
1974-ம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின. 1975-ம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப்படுத்தினார், செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார்.
நாடெங்கிலும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் பதவி நீக்கப் பெற்றது. நெருக்கடி நிலையை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைதானார்கள். நெருக்கடி நிலைக்கு சற்று முன்னரும், அதற்குப் பின்பும் நிலவிய எதிர்ப்புகள் நிறைந்த அரசியல் சூழலில், இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்ஜய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது. சஞ்ஜய் காந்தி எந்த அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை, எந்தப் பதவிக்கும் தேர்வாகவில்லை. ஆயினும், முன்னாள் கட்சி விசுவாசிகள் கட்சியை விட்டு விலகியபோதும், இந்திராவிடமும் அரசாங்கத்திடமும் சஞ்ஜயின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. சஞ்ஜய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தியதை உறுதி செய்தது என்று தோன்றுகிறது.
நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது (1975- 1977) சஞ்ஜய் தனது அதிகார ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார். இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அலுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்ஜய் நியமித்ததாகக் கூறப்படுகிறது.
1976-ல், சஞ்ஜய் காந்தி நகரத்தை சுத்தப்படுத்தும் முயற்சியாக சேரிகளை அகற்றத் தலைப்பட்டார். இதனால் சேரிகளில் வாழ்ந்து வந்தோர் தலைநகரை விட்டு வெளியேற நேர்ந்தது. தில்லியிலுள்ள டர்க்மான் கேட் மற்றும் ஜாமா பள்ளி ஆகியவற்றின் அருகே இருந்த, பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அடங்கிய பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சேரிகளை அகற்றும்படி, இவரது கூட்டாளியான ஜக்மோகன் தலைவராக இருந்த தில்லி மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு சஞ்ஜய் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் 2,50,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர நேர்ந்தது. குறைந்தது பன்னிரண்டுஇ நபர்களாவது இறந்த்ருக்கலாம் எனப் பதிவாகியுள்ளது. இது எதிர்க்கட்சியினருக்கு ஒரு உரைகல்லானது.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பரவலான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை சஞ்ஜய் வெளிப்படையாகத் தொடங்கி வைத்தார். ஆனால், குறிக்கோள் எண்ணிக்கையை எட்டும்பொருட்டு, அரசு அலுவலர்களும் காவல்துறை அலுவலர்களும் வலுக்கட்டாயமாக விதைநாள அறுவை செய்ய நேர்ந்தது. சில நிகழ்வுகளில், பெண்கள் கூட மலடாக்கப்பட்டனர். அதிகாரபூர்வமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்றிருந்தபோதும், திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் அறியாமையிலிருந்த ஏழை ஆண்களுக்கும் கருத்தடை செய்ததாக செய்திகள் குறிப்பிட்டன. இந்தியாவில், மக்கள் இன்றும் இந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொண்டு அதை நையாண்டி செய்து வருகிறார்கள். மேலும் குடும்பக் கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.
பிரதமர் இந்திரா காந்தி, ஒரு வருடத் தாமதத்திற்குப் பிறகு, 1977-ல் புதிதாகத் தேர்தல்களை நடத்த எண்ணினார். அவரது எதிரிகளை விடுதலை செய்ததோடு, நெருக்கடி நிலையையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரும் அவரது காங்கிரஸ் கட்சியும், ஜனதா கட்சி கூட்டணியால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போது, சஞ்ஜய் நெருக்கடி நிலையை மீண்டும் திணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால் இந்திரா காந்தி அதை ஏற்கவில்லை. புதிய ஜனதா அரசு, சரியான நேரத்தில், நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரிப்பதற்கென தீர்ப்பாயங்களை நியமித்தது. உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் இந்திராவையும் சஞ்ஜயையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
சஞ்ஜய் மீதான குற்றச்சாட்டுகளாக, விதைநாள அறுவை, துன்புறுத்துதல்கள், கொலைகள் மற்றும் லஞ்சம் போன்ற குற்றச் செயல்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன. நாளடைவில், இந்திரா காந்தி கைதானது நியாயமற்றதாக மக்களிடையே தோன்றியது. போதிய சாட்சியம் இல்லாததால் அவர்கள் விரைவில் விடுதலை அடைந்தனர். ஜனதா கூட்டணி கலையத் தொடங்கியதுடன் தீர்ப்பாயங்களும் செயலிழந்தன. 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சௌதரி சரண் சிங், முன்னர் ஜனதா கூட்டணி அமையக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்திரா காந்தியின் ஆதரவை நாடினார். அவருக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்த இந்திரா, சில மாதங்களுக்குப் பிறகு ஆதரவை விலக்கிக் கொண்டார்.
இதனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து புதிய தேர்தல்கள் நடந்தன. 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி அடைந்ததும், நெருக்கடி காலத்தில் உறுதியாக ஆட்சி புரிந்ததன் காரணமாக மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே போற்றும் அளவுக்கு உயர்த்தின. ஜனதா அரசு சிதறுண்டபோது ஏற்பட்ட குழப்பங்களை வன்மையாகக் கண்டித்த திருமதி காந்தி தனது முந்தைய நிலைக்குச் சென்றார். நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த தவறுகளுக்கு அவர் மன்னிப்புக் கோரினார். முக்கியமான எதிரிகளுடன் கூட்டணி அமைத்தார். 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமதி காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதியிலிருந்து சஞ்ஜய் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
சஞ்ஜய் காந்தி, பஞ்சாபிப் பெண்ணான மேனகா காந்தியை மணந்தார். இவர்களுக்கு வருண்காந்தி என்ற மகன் பிறந்தான். சஞ்ஜய் காந்தி, புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையமருகே நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் 1980-ம் ஆண்டு ஜூன் 23 அன்று இறந்தார்.