சென்னை: நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜனவரி 26, 1950 அன்று குடியரசாக மாறியது. இந்திய அரசியலமைப்பு இந்த நாளில் நடைமுறைக்கு வந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், பிரிட்டிஷ் கால இந்திய ஆளுநர் சட்டம் 1935 ஐ மாற்றி, இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயகக் குடியரசாக நிறுவியது. மிக முக்கியமாக, முதல் குடியரசு தினம் ஜனவரி 26, 1950 அன்று கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; பரந்துபட்ட இந்தியா! எண்ணற்ற மொழிகள், இனங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் தழைக்கும் நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு. நாம் அனைவரும் சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன், சுதந்திரத்துடன் வாழும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது.
இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை. அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன. நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல, பன்முகத்தன்மையே. அந்தப் பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவைக் காக்கும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் போற்றுவோம்! பெருமிதத்துடன் என் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகள்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]