சென்னை

வாலிபக் கவிஞர் எனப் பாராட்டப்படும் வாலியின் பிறந்த நாள் இன்று.

தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் புகழ்பெற்று விளங்கி உள்ளனர்.   அவர்களில் வாலி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.   இவர் இயற்பெயர் ரங்கராஜன்.  இவர் 1931ஆம் வருடம் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிறந்தவர்.  இவர் சிவாஜி, எம் ஜி ஆர் காலம் தொடங்கி தற்போதைய கதாநாயகர்கள் நடித்த படங்கள் வரை பல தலைமுறையாக புகழ் பெற்ற பாடலாசிரியராக விளங்கியவர்.

1958ஆம் வருடம் அழகர்மலைக்கள்ளன் என்னும் திரைப்படத்தில் தனது முதல் பாடலை எழுதினார்.   ஆனாலும், 1963ஆம் வருடம் வெளியான கற்பகம் என்னும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் புகழ் பெற ஆரம்பித்தார்.    எம் ஜி ஆரின் மனதைக் கவர்ந்த இவர் தொடர்ந்து எம் ஜி ஆரின் கொள்கைப் பாடல்களை எழுத ஆரம்பித்தார்.   இவரின் பல பாடல்கள் அந்த காலகட்டத்தில் புகழ் பெற்று விளங்கிய கண்ணதாசன் பாடல்கள் என்றே பலரும் கருதினர்.    எம் ஜி ஆருக்கு மட்டும் இன்றி அப்போது புகழ் பெற்ற கதாநாயகனான சிவாஜிக்கும் பல பாடல்களை எழுதி உள்ளார்.

அன்று தொடங்கிய அவர் கலைப்பயணம் பல தலைமுறைகளைத் தாண்டியும் தொடர்ந்தது.   அவர் பாடல்களில் தாயைப் புகழ்ந்து எழுதிய “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்னும் பாடல் இன்றைய தலைமுறையினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.  அவர் பல ஜனரஞ்சகப் பாடல்களையும் எழுதி அதனால் பல சர்ச்சைக்கும் உள்ளாகி இருக்கிறார். எளிமையை விரும்பும் வாலி எப்போதும்  நூலாடையாக இருந்தால் வெள்ளையும், பட்டாக இருந்தாலும் சந்தன நிறமும் விரும்பி உடுத்துவார்.

நடிப்புத் துறையிலும், இவர் கால் பதித்துள்ளார்.   பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  பாலசந்தரின் தொலைக்காட்சி தொடரான கையளவு மனசு தொடரில் இவர் நடிப்பு பெரும் புகழைப் பெற்றுத்ததந்தது.   அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் முதலிய 15 புத்தகங்களுக்கு மேல் எழுதி உள்ளார்.  இவர் ரமணதிலகம் என்பவரை காதல் மணம் புரிந்துள்ளார்.   நடிகைகள் பத்மினி, ஈ வி சரோஜா ஆகியோருடன் நடனம் பயின்றுக் கொண்டிருந்த இவரை மணம் செய்ய பத்மினியும் ஈ வி சரோஜாவும் மிகவும் உதவி உள்ளனர்.

பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ள இவர் இயக்கிய ஒரே படம் வடைமாலை ஆகும்.   எம் ஜி ஆர் மட்டுமின்றி கருணாநிதியுடனும் இவருக்கு நட்பு இருந்தது.   பல விருதுகளைப் பெற்றுள்ள வாலி ஆன்மீக நாட்டம் உடையவர்.  முருக பக்தர்.  ஆனால் பெரியாரை புகழ்ந்து வாலி எழுதிய ஒரு பாடலுக்கு பெரியாரால் பாராட்டுப் பெற்றுள்ளார்.    விஸ்வநாதன் – ராம மூர்த்தி தொடங்கி இன்றைய ஏ ஆர் ரகுமான் வரை பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் விருப்பக் கவிஞர் வாலி ஆவார்.   இவரது இறுதிப்படமான காவியத்தலைவன்  படத்துக்கு இசை ஏ ஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது 82ஆம் வயதில் 2013ஆம் ஆண்டு ஜூலை மதம் 18ஆம் நாள் மரணம் அடைந்தார்.  சுவாசக் கோளாறு காரணமாக மரணம் அடைந்தார்.  இவருடைய மனைவி இவருக்கு முன்பே 2009ஆம் வருடம் இறந்து விட்டார்.  இவருக்கு ஒரே மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.   அவர் மூச்சுக் காற்று மறைந்தாலும் அவருடைய பாடல்கள் என்றும் மறையாமல் அமரத்துவம் பெற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை.