சென்னை
இன்று எம் ஜி ஆர் பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என பெயர் கொண்ட எம் ஜி ராமச்சந்திரன் சுருக்கமாக எம் ஜி ஆர் என அழைக்கப்பட்டவர். அவர் மறைந்து சுமார் 32 ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் அவரை யாரும் மறக்க முடியாத நிலையில் அவர் புகழ் பெற்றுள்ளார். கடந்த 1977 முதல் 1987 வரை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கையில் ராமச்சந்திரன் – சத்தியபாமா தம்பதியரின் மகனாக 1917 ஆம் வருடம் பிறந்தார். சிறு வயதில் தந்தை மறைந்ததால் இவராலும் இவர் அண்ணன் எம் ஜி சக்கிரபாணியாலும் கல்வியை தொடர இயலவில்லை. இருவரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிப்பு, இசை, சண்டைப் பயிற்சி உள்ளிட்டவற்றை கற்றுத் தெர்ந்தனர். அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்க எம்ஜிஆர் கடும் முயற்சி செய்தார்.
சதிலீலாவதி என்னும் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமான எம் ஜி ஆர் அதன் பிறகு கதநாயகன் ஆகி நம்பர் 1 இடத்தை பிடித்தார். அவருடைய சண்டைக் காட்சிகளும் காதல் காட்சிகளும் மக்களை மிகவும் கவர்ந்தன. முதலில் காங்கிரஸ் கட்சி அபிமானியாக இருந்த எம் ஜி ஆர் அதன் பிறகு அவருடைய அரசியல் குருவான அண்ணாதுரையால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். திமுக முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர்களில் எம் ஜி ஆருக்கு தனி இடம் உண்டு.
அண்ணாதுரையின் மறைவுக்கு பிறகு திமுக குறித்த ஊழல் புகார்கள் தலை தூக்கின. ஆகவே அப்போது திமுக பொருளாளராக இருந்த எம் ஜி ஆர் திமுக நிர்வாகிகள் சொத்துக் கணக்கை அளிக்க வேண்டும் என கூறினார். அதை ஒட்டி அப்போதைய திமுக தலைவர் மு கருணாநிதியால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். புதிய கட்சியாக அவர் தொடங்கிய அண்ணா திமுக ஆரம்பித்த சில நாட்களிலேயே ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு அவர் மறையும் வரையில் எம் ஜி ஆர் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.
காமராஜர், பெரியார், அண்ணாதுரை ஆகிய அனைவரின் அன்புக்கும் உரியவராக எம் ஜி ஆர் இருந்தார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் மிகவும் நட்புடன் இருந்த தலைவர்களில் எம் ஜி ஆரும் ஒருவராவார். சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட எம் ஜி ஆர் கடந்த 1987 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மரணம் அடைந்தார்.