இன்று மகா சங்கட ஹர சதுர்த்தி : விநாயக விரதம் இருக்கும் முறைகள்

 

முழுமுத்ல் கடவுள் என வணங்கப் படுபவர் விநாயகப் பெருமான்.   அவருக்கு உகந்த திதி சதுர்த்தி.    சங்கட ஹர என்பதன் பொருள் நமக்கு வரும் சங்கடங்களை அழிக்க வல்லவர் விநாயகர் எனபதே ஆகும்.   பவுர்ணமிக்கு பின் வரும் சதுர்த்தி சங்கட ஹர சதுர்த்தி என அழைக்கப்பட்டு வினாயகருக்காக விரதம் இருக்கப்படுகிறது.   மாதா மாதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் வந்தாலும், ஆவணி, மற்றும் மாசி மாதங்களில் பவுர்ணமிக்கு பின் வரும் சதுர்த்தியே மகா சங்கட ஹர சதுர்த்தி தினமாகும்.

இந்த ஆண்டின் மகா சங்கட ஹர சதுர்த்தி விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.   விரதம் அனுஷ்டிக்கும் முறைகள் இதோ :

விடியற்காலையில் படுக்கையிலிருந்து எழுந்த உடன் வீட்டிலுள்ள வினாயகரை துதிக்கவேண்டும்.  பின்னர் தலைக்கு குளித்து, வினாயகருக்கு பலவித மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.  முக்கியமாக அருகம்புல்லினால் அர்ச்சனை செய்வது வினாயகர் பூஜையில் முக்கியமாகும்.   பூஜை இறுதியில் ஏதேனும் இனிப்பு, முக்கியமாக கொழுக்கட்டை நைவேத்யம் செய்து தூப தீப ஆராதனைகள் செய்ய வேண்டும்.

அன்று மாலை முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.   முடியாதவர்கள் பால், பழம் ஆகியவைகளை மட்டும் சாப்பிடலாம்.    மாலையில் அருகில் உள்ள வினாயகர் ஆலயத்துக்கு சென்று, சங்கட ஹர சதுர்த்தி, அபிஷேகம் மற்றும் பூஜையில் கலந்துக் கொள்ள வேண்டும்.   வசதி படைத்தோர் அங்கு வருபவர்களுக்கு பிரசாதம் அளிக்கும் கைங்கரியமும் செய்யலாம்.   பிறகு இரவு உணவு உட்கொண்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

 

இதே போல் இன்று தொடங்கி ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்றும் வருடம் முழுவதும் விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என புராணங்கள் கூறுகின்றன.    இந்த விரதம் இருப்போருக்கு, கல்வி அறிவு, நல்ல வேலை வாய்ப்பு, திருமணம் கைகூடும், நல் மக்கட்பேறு , மற்றும் நோய் நொடியில்லா வாழ்க்கை ஆகியவை கிட்டும்.   முக்கியமாக சனி தோஷம் உள்ளவர்கள் கடை பிடிக்க வேண்டிய விரதமாகும்

புராணங்களிலும் மகா சங்கட ஹர சதுர்த்தி விரதம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.   சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதம் இருந்துதான் மீண்டும் சிவனுடன் சேர்ந்தார்.   செவ்வாய் கிரகமாக அங்காரகன் புகழ் பெற்றது இந்த விரதத்தின் மகிமையே.  கிருத வீரியன் இந்த விரதம் இருந்து கார்த்தவீரியனை மகனாகப் பெற்றான்.   பாண்டவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்துத்தான் எதிரிகளை வெற்றி கொண்டனர்.

இன்று நாம் அனைவரும் வினாயகரை வழிபட்டு நாமும் அருள் பெருவோம்.


English Summary
Today is Maha sankata hara chathurthi : methods to perform pooja