மும்பை
இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் தென் ஆப்ரிக்க அணியும் மோதுகின்றன.
தற்போது இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதில் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி அடுத்த ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.
முந்தைய ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. பேட்டிங்கில் டேவிட் மலான், ஜோ ரூட் நிலையான ஆட்டத்தை வழங்கி வருகின்றனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கேப்டன் ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டன்தொடர்ந்து ஏமாற்றம் அளிப்பது பின்னடைவாக உள்ளது. பேட்டிங்கில் ஏற்றம் காண அவர்கள் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியமானதாகும். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களை தவறவிட்ட ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் இந்த போட்டியில் களம் காணுவார் என்று தெரிகிறது. அவரது அனுபவம் இங்கிலாந்துக்கு நிச்சயம் அனுகூலமாக இருக்கும்.
தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. இலங்கைக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 428 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா அடுத்த ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைத்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மழையால் பாதித்து 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
முந்தைய ஆட்டங்களில் பேட்டிங்கில் கலக்கிய குயின்டான் டி காக், மார்க்ரம், வான்டெர் டஸன் விரைவில் விக்கெட்டை இழந்தது அணியின் உத்வேகத்தை உருக்குலைத்ததுடன் தோல்விக்கு வழிவகுத்தது. கடந்த அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.
இது இந்த சீசனில் மும்பை வான்கடே விளையாட்டரங்கத்தில் நடக்கும் முதல் ஆட்டம் ஆகும். எனவே பேட்டிங்குக்கு உகந்த இங்கு இரு அணி பேட்ஸ்மேன்களும் ரன்வேட்டை நடத்த வாய்ப்புள்ளது.