அலங்கநல்லூர்
இன்று அலங்கநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பொங்கல் பண்டிகை தினமான செவ்வாய்க்கிழமை அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் நாளில் பாலமேட்டிலும் நடைபெற்றது.
இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்பது, பார்வையாளர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு ஜல்லிகட்டு போட்டியில் 1,000 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள் போட்டியில் களம் இறங்குகின்றனர்.
அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி நேற்று இரவு அவர் மதுரை வந்தார். இந்த போட்டியை காண நேற்று இரவில் இருந்தே வெளியூர்களில் இருந்து வந்த பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவியத்தொடங்கியுள்ளனர்.