சென்னை

சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாலும், 18-ம் தேதி தமிழகத்துக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாலும் கடந்த 18 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்படும் என்றும், மாநிலங்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அதனை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.