ராமநாதபுரம்

இன்று திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இன்று தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது.. இந்த கூட்டம் தி.மு.க.  தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதையொட்டி ராமநாதபுரத்தில், தேவி பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் பேராவூர் அருகே மிகப் பிரமாண்டமான பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. பந்தல் கோட்டை கொத்தளம் போன்ற முகப்புடன் அமைக்கப்பட்டு இருக்கிறது. இன்று காலையிலிருந்தே வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெறும். பிற்பகலில் மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் பேசுகிறார்.

மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக ராமநாதபுரம் வருவதால் இன்று காலையில் மதுரையிலிருந்து புறப்பட்டு காரில் வரும் அவருக்கு, ராமநாதபுரம் மாவட்ட எல்லையிலிருந்து ராமநாதபுரம் வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

அந்தந்த பகுதி நிர்வாகிகள் இதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.  முதல்வர் பங்கேற்கும் விழாக்களுக்காக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தங்கத்துரை தலைமையில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.