சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 5 நாட்கள் பயணமாக ஊட்டி செல்கிறார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், கவரவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடைக்காலத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில், ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
பிறக் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. இன்று ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.
மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
பிறகு பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன் பழங்குடியின மக்களை சந்தித்து பேச உள்ளார். வரும் 15-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, மலர் அலங்காரங்களை பார்வையிட்ட பின் 16-ந் தேதி 5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்புகிறார்.