சென்னை 

இன்று சென்னையில் நடைபெறும் ஐ பி எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன் அணிகள் மோதுகின்றன. 

இந்தியாவில் நட்ந்து வரும் 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று  நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது. ஏற்கனவே சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது..

சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபேவும், பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வீழ்த்தி அசத்திய முஸ்தாபிஜூர் ரகுமான், தீபக் சாஹர், தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜாவும் நல்ல நிலையில் உள்ளனர். சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டு அமர்க்களமாக தொடங்கி இருக்கும் சென்னை அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

குஜராத் அணி தனது சொந்த மண்ணில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியில் கால் பதிக்கிறது. குஜராத் அணியில் பேட்டிங்கில் விருத்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் திவேதியாவும், பந்து வீச்சில் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், உமேஷ் யாதவ், ரஷித் கான், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மொகித் ஷர்மாவும் வலுசேர்க்கிறார்கள்.

இரண்டாவது வெற்றிக்காக சென்னை, குஜராத் அணிகள் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 தடவையும் வென்று இருக்கின்றன. கடைசியாக நடந்த 2 மோதலிலும் (கடந்த ஆண்டு இறுதிப்போட்டி, முதலாவது தகுதி சற்று) சென்னை அணியே வென்றுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.

இது சென்னையில் நடைபெறும் 2 ஆவவது ஆட்டம் ஆகும். கடந்த 22-ந் தேதி நடந்த தொடக்க லீக் ஆட்டத்தை காண ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டதனால் இந்த ஆட்டத்திலும் ரசிர்கர்களின் ஆர்ப்பரிப்பும், ஆதரவும் சென்னை அணிக்கு பக்கபலமாக இருக்கும் எனலாம். போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.