சென்னை

ன்றுடன் 2020 வருடம் முடிவடையும் நிலையில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த வருடம் தமிழகத்தில் இரு புயல்கள் வீசி சேதம் ஏற்படவில்லை எனினும் கனமழையால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.   வழக்கமாகப் பெய்யும் சராசரி அளவை விட இந்த வருடம் சுமார் 4% க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.  இந்நிலையில் 2020 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனத் தெரிய வந்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம், “காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரங்களுக்குத் திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது.

அத்துடன் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்குச் சென்னை மற்றும் புற நகர்ப் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் தென்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.