சென்னை: முன்கூட்டியே தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் வாய்ப்பு குறைவு என  மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பணிகளை ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. ஜனவரியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்த்ல் ஆணையர் சத்தியபிரதா சாஹு கூறியதாவது,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டமன்ற தேர்தலில்  வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க   தேர்தல் ஆணையம் ஒரு முடிவு செய்துள்ளது.  தற்போது,  தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை சுமார் 67,000 உள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிப்பதற்கான திட்டம் தயாரித்து வருகிறோம். அதனால், தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையை 95 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.

இந்த நிலையில், தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்புகள் குறைவு என்றும் கூடுதல் வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், குறைந்தது ஒரு மாதத்தில் இந்த பணி முடிக்கப்பட்டாலும், மற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளதால் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பீகார் சட்டமன்ற தேர்தலை மேற்கோள்கட்டி பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர்,  தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று கூறியதுடன்,   கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டும், அதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட வேண்டும், அவைகள்  மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதனால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.