ட்சய திருதியை என்றாலே அள்ளக்அள்ளக் குறையாத  அட்சய பாத்திரத்தையே நினைவுபடுத்துவதாகும்.

மணிமேகலைக்கு இன்றைய நாளில்தான் அட்சய பாத்திரம் கிடைத்ததாகவும், அதன்மூலம் அள்ள அள்ளக்குறையாத அளவில் அனைவருக்கும் உணவு அளித்ததாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

இதை வைத்தே , இன்றைய நாளில் தங்கம் வாங்கினால் வீடுகளில் அட்சய பாத்திரம் போல தங்கம் அள்ள அள்ளக்குறையாத அளவில்  பெருகும் என்று வணிகர்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இந்நன்னாளில் வீட்டுக்கு தேவையான ஏதாவது ஒரு பொருளை  வாங்கினாலும் போதுமானது. இன்றைய நாளில் பொருட்கள் வாங்கினால்  வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதிகம்… தங்கம்தான் வாங்க வேண்டும் என்பதில்லை… சாதாரண உப்பு வாங்கினால்கூட போதுமானது.

தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை  நாளை அடுத்த மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை என்று புராணங்களில் கூறப்படுகிறது. இது திருமாலால் ஆளப்படுவதாகவும் ஐதிகம்.

மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார்.

இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி  சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.

சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

“அட்சயா” எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது  எனும் பொருளில் வழங்கப்படுகிறது. இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக மங்களகரமான பொருட்களான  தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என முன்னோர்கள்  கூறுகின்றனர்.

ஆகையால், இன்றைய தினத்தில் புது வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை செய்தால் தொழில்  விருத்தியாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அதே நேரத்தில்,  அட்சய திருதியை மகாலட்சுமிக்கான நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமியை இந்நன்னாளில் வணங்கினால் செல்வம் பெருகும் என்பதும் நம்பிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளில் மூன்றாம் பிறை நாளன்று வருவதே அட்சய திருதியை நாள்.

இந்த வருடம் சித்திரை மாதம் 5ம் நாளான இன்று (18-04-2018)  அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

இன்று வீடுகளில் நமது முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களது ஆசி கிடைக்கும் என்றும், குடும்பத்தில் ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அட்சய திருதியை அன்று நமது இஷ்ட தெய்வத்தையும், மகாலட்சுமி மற்றும் குபேரனை  வணங்கினால்,  அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சவுபாக்கியங்களும்  கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் இன்றைய தினம், வீடுகளில்,  பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து, குத்துவிளக்கேற்றி, மகாலட்சுமி படம் அல்லது அரிசி நிறைந்த செம்பு, அல்லது நீர் நிறைத்து அதில் வாசனை திரவியங்களான பச்சை கற்பூரம், ஏலம், போட்டு வைத்து வாசனை மலர்களால் தங்களுக்கு தெரிந்த மந்திரம் கூறி பாயசம் நைவேத்தியம் செய்து மகாலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் பெருகும்.

அதுபோலவே இன்று  பசித்தோருக்கு உணவு வழங்குதல் இல்லாதவர்களுக்கு உடை கொடுத்தல் ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்தல் போன்றவை நம்மை குறைவில்லாத செல்வமுடனும் நிறைந்த ஆயுளுடனும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்.

மணிமேகலைக்கு இந்நாளில் தான் அட்சய பாத்திரம் கிடைத்தது என்று வரலாறு கூறுகிறது.. அதனால் அன்றுமுதல் மக்களின் பசியை போக்குவதையே மணிமேகலை தன் கடமையாக கொண்டிருந்தாள்.

சந்திரன் சாப நிவர்த்தி சாபம் பெற்று தேய்ந்து போன சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சய சாப நிவர்த்தி பெற்று அட்சய திரிதியை தினத்திலிருந்து மீண்டும் வளரத் தொடங்கிய தாகவும் புராண கதைகளில் கூறப்படுகிறது.

எனவே, அட்சய திருதியை நாளான இன்று செய்யும் அனைத்து காரியங்களும் வளர்பிறை போல வளரும் என்றும், இன்றைய நாளில் தங்கம் மட்டும் அல்ல எந்த பொருளை சேமித்தாலும் அது நன்மையே.

இந்நன்னாளை, வணிகர்கள் தங்களது வியாபார நோக்கத்தை  முன்னிட்டு, இன்றைய நாளில் தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்பதுபோன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இன்று  தங்கத்தை வாங்கினால்… செல்வம் பெருகும் என விளம்பரப்படுத்தி நமது மக்களின் மன நிலையை உசுப்பி விடுகிறார்கள் என்பதே உண்மை.

இன்றைய நாளில் ஒவ்வொரு வரும் தங்களது  பொருளாதார நிலைக்கு தகுந்தவாறு  வீட்டிற்கு தேவையான ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும் அது சிறப்பே…