சென்னை: சென்னையில் இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். நேற்று இரவு சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த பேய்மழை மற்றும் காற்றில் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், இன்றும் அதுபோல பேய் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள கடற்கரை பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கிண்டி, அசோக் நகர், கோடம்பாக்கம், மாம்பலம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் பல இடங்களில் திடீர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து அந்த பகுதிகளில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை மற்றும் காற்று குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ சென்னையில் அதி வேகத்துடன் பலத்த காற்று வீசியது. இது ராயலசீமாவில் இருந்து 3 மணி நேரம் கழித்து சென்னை வந்தது.
அதிர்ஷ்டவசமாக நேற்று போலல்லாமல், இன்று காற்று வலுப்பெற்று பலத்த காற்று வீசும். அதனால் அதிக காற்று வீசும். இன்று இரவும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு இன்று பலத்த காற்றுடன் மழையை எதிர்பார்க்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் “என்ன ஒரு மழை…. மாங்காடு, பூந்தமல்லி, தாம்பரம் மற்றும் தென் சென்னை லா நீர்யானைகள் அதிக மழை கொட்டியது. மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் காற்று வீசியது. சென்னையின் பிற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. வட சென்னையில் குறைவான மழை பெய்தது.
பூந்தமல்லியில் 104 மி.மீ. மழையும், சோழிங்கநல்லூர் 82 மி.மீ. மழையும், செம்பரம்பாக்கத்தில் 70 மி.மீ மழையும், திருவேற்காட்டில் 62 மி.மீ. மழையும் மடிப்பாக்கத்தில் 50 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 43 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. இன்று இரவு மீண்டும் கண்காணிக்கலாம். இந்த ஜூன் மாதம் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பல நாட்கள் மழை பெய்யும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. பூவிருந்தவல்லி 11 செ.மீ., சோளிங்கரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.