பெங்களூரு
இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலத்தின் 24 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது.
சுமார் 3,84,000 கி மீ தூரத்தில் பூமியின் துணைக் கோளான நிலவு இருக்கிறது. இதை 40 நாட்களில் கடந்து சென்ற சந்திரயான்-3, நிலவின் தென் துருவத்தில் இறங்கி, வெற்றிகரமாக ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.
தற்போது சூரியன் பற்றிய ஆய்வில், 4-வது நாடாக இந்தியா இணைய உள்ளது. இதுவரை பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை பற்றிய ஆய்வை அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகள் மேற்கொண்டிருக்கின்றன.
நாளை பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்படும் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்த உள்ளது.
இந்த விண்கல, சுமார் 400 கிலோ எடை கொண்டதாகும் இது சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கிருந்தபடி சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை ஆதித்யா எல்-1 தொடங்க இருக்கிறது.
நாம் சூரியனில் இருந்து 14 கோடியே 85 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி இருந்தாலும், ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி (டெலஸ்கோப்) கருவிகள், சூரியனை அருகில் இருந்து பார்ப்பதுபோன்ற பிரமாண்டத்தை காட்டும்.
இந்த விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும். இந்தஆதித்யா எல்-1-ன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பதால், அதுவரை இடைவிடாமல் ஆய்வு பணியை மேற்கொள்ளும்.
ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுண்டவுன் தொடங்கி உள்ளது. ஆதித்யா எல் 1 நாளை காலை 11.50 மணிக்கு ஏவப்படவுள்ள நிலையில் தற்போது இந்த கவுண்டவுன் தொடங்கி உள்ளது.