பெங்களூரு: நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1  விண்கலம் ஏவுவதற்கான 24மணி நேர கவுண்ட்-டவுன்  இன்று மதியம் 11.50 மணி அளவில் தொடங்கியது. இந்த ஆதித்யா எல்-1 மிஷனுக்கும் தமிழ்நாட்டைச்சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி இருந்து வருகிறார் என்பது தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

சூரியனை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள, ஆதித்யா எல்1 விண்கலம் நாளை முற்பகல் 11.50மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.  இதற்கான 24மணி நேர  கவுண்டவுன் இன்று காலை சரியா 11.50 மணிக்கு தொடங்கியது. ஆதித்யா எல்1 நாளை காலை சரியாக 11.50 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில், ஏற்கனவே திட்டமிட்டு அறிவித்தபடி, சூரியனை ஆராய ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் நாளை விண்ணில் பறக்க உள்ளது.  ஆதித்யா எல்-1 விண்கலமானது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.   ஆதித்யா எல்1. தொடர்பாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் தான் சூரியன். அதன்படி, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் என்பது 150 மில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த ஆதித்யா எல்1, சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் செயற்கைகோளை நிலைநிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதித்யா எல்1 விண்கலம் பயணிக்க உள்ள மொத்த தூரம் 1.5 மில்லியன் கிலோ மீட்டர். இந்த இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி – சி57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 24 மணி நேர கவுண்ட் – டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.

சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் ஆதித்யா எல்1 –ல் உள்ளன.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே சூரியனை ஆராய பிரத்யேக செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. அதில், கடந்த 2017ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் பார்க்கர் சோலார் ப்ரோப் செயற்கைக்கோள் அதிகபட்சமாக, புவியிலிருந்து 8.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் சென்று சூரியனை ஆய்வு செய்து உள்ளது. இந்த வரிசையில் தற்போது இந்தியா இணைய உள்ளது. ஆனால், மற்ற நாடுகளை காட்டிலும் மிகக் குறைந்த செலவிலேயே ஆதித்யா எல்1 திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதித்யா எல்-1 திட்ட இயக்குராக  தமிழ்நாட்டை  பெண் விஞ்ஞானி நிகர் சாஜி இருந்து வருகிறார். ஏற்கனவே நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்3 வரையிலான மூன்று மிஷன்களும்,  விண்கலம் உருவாக்குவதிலும் திட்ட இயக்குனர்களாக தமிழர்களே பணியாற்றி வந்த நிலையில், தற்போது சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி தென்காசியைச் சேர்ந்த  நிகர் சாஜி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இஸ்ரோவின் சந்திரயான் விண்கலங்களான  சந்திரயான் -1 க்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை, சந்திரயான் 2–க்கு விஞ்ஞானி வளர்மதி, சந்திரயான் 3-க்கு விஞ்ஞானி வீரமுத்துவேல் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய நிலையில், ஆதித்யா எல்-1 மிஷனுக்கும் தமிழ்நாட்டைச்சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி இருந்து வருகிறார் என்பது தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.