டில்லி

நாடாளுமன்றத்தில் இன்று 49 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு இதுவரை 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த புதன்கிழமை மக்களவையில் மதியம் 1 மணியளவில் நடந்த விவாதத்தின்போது, திடீரென பார்வையாளர்கள் வரிசையில் இருந்து இருவர் அவைக்குள் குதித்து ஓடினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை அளிக்கக் கோரியும், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கண்டித்தும், எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன.

எதிர்க்கட்சிகளின் அமளியால், அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டது. மதியம் 3 மணிக்குப் பின்னர், தலைவர் ராஜேந்திர அகர்வால் தலைமையில் அவை கூடியபோது, மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர் எனக் கூறியும், அவையின் கண்ணியம் மற்றும் மதிப்பு ஆகியவற்றைக் காக்கும் வகையிலும் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்க செய்யப்படுகின்றனர் என சபாநாயகர் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதேபோன்று மேலவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதாக 45 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 78 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஏற்கனவே தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மக்களவையில் இடைநீக்கமானார்கள். எனவே இடை நீக்கம் செய்யப்பட்ட மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது

இன்றும் ரகளை தொடர்ந்ததால், மக்களவையில் 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.