சென்னை:

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றவர்களில்  30 பேர் உள்பட தமிழகம் முழுவதும்  52 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கடந்தவாரம் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில், அதிலிருந்து விடுபடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி,  தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 1267 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபேல, 180 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.  1,072 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சில நாட்களாக தமிழக அரசு எடுத்து வரும் தீவிர தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவர்களின் அயராத பணி காரணமாக நோயாளிகள் குணமடைந்து வருவது அதிகரித்து வருகிறது.

சென்னை  ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நோய் குணமான  30 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உதவிகளை வழங்கி,  கைகளை கழுவுதல் மற்றும் நம்பிக்கையுடன் இருப்பது குறித்து அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்வில் பேசிய ஒருவர்,   “சுகாதாரப் பணியாளர்கள் எங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்தனர் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து,  மருத்துவமனை டீன், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர். அவர்களை மேலும் சில வாரங்கள் அரசு கண்காணிக்கும். அவர்கள் 14 நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீடுகளில் தனிமையில் இருக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் களில், 50 வயதை கடந்த 7 பேர்உள்பட 10 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு  மாவட்டத் ஆட்சித் தலைவர் வினய், மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணி மற்றும் மருத்துவர்கள் பூங்கொத்து கொடுத்து வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.

கோவை அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இன்று மட்டும் மொத்தம் 52 பேர் நோய்த் தொற்றில் இருந்து விடுதலையாகி வீடு திரும்பி உள்ளனர்.