இன்று (12-11-2016) சனி பிரதோஷம் (மகா பிரதோஷம்)

சனி பிரதோஷம் (மகா பிரதோஷம்)

ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்கு பவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. உலகத்தின் மிகப் பழமையான வழிபாடும் சிவ வழிபாடுதான்.

தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் தோஷங்கள் அகன்றுவிடும்.

சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும்.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன.

இன்று சனிக்கிழமை. மகா பிரதோஷ தினம்.

இந்த நாளில் அதாவது சனி மகா பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

prathosam1சிவபிரான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள் புரிய எண்ணி கயிலை யில் அன்று மாலை (4:30 மணி முதல் 6:00 மணி வரை) பிரதோஷ வேளையில் தம் திருமுன் இருந்த ரிஷப தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று அம்பிகைக் காணத் திருநடம் புரிந்தார். அது முதல் திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோஷ காலம் என்று பெயர்பெற்றது.

சனிக்கிழமை பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு.

சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்குமாம்.

பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் நலம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்… சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

prathosam3

20 வகை பிரதோஷங்களும் அதன் பலனும்

சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது.

குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் உண்டு. அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

1. தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள  லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

prathosam2

9. மகா பிரதோஷம்  (சனி பிரதோஷம்):

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமை யும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும்.

இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்ச நல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்த எதால், கிருஷ்ணர் பிறந்தார்.

நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்டதிக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

kamadhenu

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: (Maha pirathosam), (மகா பிரதோஷம்), Aanmegam, anmegam, Sani pirathosam, Today (12-11-2016), ஆன்மிகம், ஆலயம், இன்று (12-11-2016), சனி பிரதோஷம்
-=-