சென்னை:

மிழகத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும்  விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. அதன்படி அங்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

நாங்குநேரி தொகுதியில், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரூபி மனோகரன், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் அதிமுக  வேட்பாளர் நாராயணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ நாராயணன் உட்பட, 23 பேர் களத்தில் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி, அ.தி.மு.க., வேட்பாளர் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, உட்பட 12 பேர் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. – தி.மு.க., இடையிலும், நாங்குநேரியில் காங்., – அ.தி.மு.க., இடையிலும் நேரடி போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக  கடந்த 15 நாட்களாக  விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்த நிலையில், பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று மாலை முதலே வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றன. விக்கிரவாண்டியில் பல இடங்களில் பதற்றம் நிலவுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 6.00மணி அளவில் வாக்குச்சாவடிகளில் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதியாக சோதனை செய்யப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதையடுத்து  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

அதுபோல புதுச்சேரி காமராஜர்நகர் இடைத்தேர்தல்வாக்குப்பதிவும் தொடங்கியது.

வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து, வரும் 24ந்தேதி தெரிய வரும். வாக்கு எண்ணிக்கை, 24ம் தேதி நடைபெற உள்ளது.