சென்னை,

துக்கடைகளை திறப்பதற்கு வசதியாக சாலைகள் பெயர் மாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து பா.ம.க. சார்பில் வரும் 27ந்தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

உச்சநீதி மன்றம் தீர்ப்பு காரணமாக நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை, தமிழக அரசு  சாலைகளின் பெயர் மாற்றம் செய்து மீண்டும் திறந்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் 27ந்தேதி தமிழக அரசை எதிர்த்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாமக இளைஞர்அணி தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றில் அக்கறை செலுத்துவதை விடுத்து, நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக மாற்றம் செய்து, மதுக்கடைகளை திறக்க முயன்று வருகிறது.

மக்களை மீண்டும் மீண்டும் குடிகாரர்களாக்கும் நோக்கம் கொண்ட தமிழக அரசின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக அனைத்து நகராட்சி நிர்வாக மண்டல ஆணையர்களுக்கும் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் கடந்த 21-ந் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மற்ற துறைகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டியிருப்பதாகவும், இதைத் தவிர்த்து விரைவாக நிவாரணப் பணிகளை செய்வதற்காக வும் தான் இப்படி ஓர் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அக்கடிதத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கவே தமிழக அரசு இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர்; மக்களை ஏமாற்ற முடியாது.

தமிழக அரசுக்கு இறுதி எச்சரிக்கையாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சிதைக்கும் வகையில் சாலைகளை வகைமாற்றம் செய்து மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் பா.ம.க. சார்பில் தொடர் முழக்க அறப்போராட்டம் நடத்தப்படும்.

இப்போராட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தமிழ கத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளில் ஒன்று கூட சாலைகளில் மீண்டும் திறக்கப்படக்கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. அதற்காக சட்டப்போராட்டம், அரசியல் போராட்டம் என எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் பா.ம.க. செய்யும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்