டில்லி
பிரதமரின் ஆலோசனைக் குழுத் தலைவர் பிபெக் டெபராய் நாடு முன்னேற மாநில வளர்ச்சி முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிபெக் டெபராய் பதவி வகித்து வருகிறார். இவர் சமீபத்தில் செய்தியாளருக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அந்தப் பேட்டியில் அவர் பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பிபெக் டெபராய், “பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளதாகச் சொல்வது தவறாகும். இந்த வருடம் பொருளாதார வளர்ச்சி சுமார் 5% வரை இருக்கும். அடுத்த வருடம் இது 6% ஆக உயரும். வட்டி விகித மாற்றம்,வரி விகித மாற்றம் ஆகியவற்றின் மூலம் இதை அடைய முடியும்.
தற்போது ஜிடிபி குறைந்துள்ளது. கடந்த 4 வருடங்களாக ஜிடிபி வளர்ச்சி 9% ஆக இருந்தது. ஏற்றுமதி ஜிடிபி 20% ஆக இருந்தது. ஏற்றுமதியானது டாலரின் அடிப்படையில் 15% அதிகரித்தது. சிலவேளைகளில் 19% ஆகவும் சிலவேளைகளில் 20% ஆகவும் உயர்ந்தது. அதாவது ஜிடிபி அதிகரித்து இருந்ததன் காரணம் ஏற்றுமதியாகும். தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதால் ஜிடிபி குறைந்துள்ளது.
நாட்டின் வருமானத்தில் ரெயில்வே, பாதுகாப்பு போன்றவற்றை எடுத்து விட்டால் மீத வருமானத்தில் 90-95% வருமானம் மாநிலங்கள் மூலம் கிடைக்கிறது. தற்போது மாநில ஜிடிபி வளர்ச்சி என்பது 6% ஆக மட்டுமே உள்ளது. எனவே மாநிலங்கள் வளர்ச்சி அடையாவிடில் இந்தியா வளர்ச்சி அடையாது.” எனத் தெரிவித்துள்ளார்.