சென்னை: வாகனங்களுக்கு பேன்சி எண்கள் பெற ரூ. 8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அரசாணையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தில் செக்ஷன் 4(6)ன் படி ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் யூனியன் பிரதேசத்தின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துகளைப் பதிவு எண்ணில் முதலில் குறிப்பிடப்படும். அதைத்தொடர்ந்தே வாகன எண்கள் வரிசைப்படி வழங்கப்படும்.  அதாவது, தமிழ்நாட்டுக்கு TN என்ற தொடக்க எண்ணுடன் அந்த மாவட்டத்துக்கான எண்ணும் இணைத்து,  ஒவ்வொரு ஆர்டிஒ அலுவலகத்திலும் 1 முதல் 9999 வரையான எண்களைக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட 97 எண்கள் பேன்சி எண்களாக அறிவிக்கப்பட்டு, அவை தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டு, அதை தேவைப்படுவோர் அதிக பணம் கட்டி பெற முடியும்.  வேண்டுவோருக்கு கூடுதலாக பணத்துக்காக வழங்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக வாகனங்களுக்கான பேன்சி எண் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள்,  அரசியல்வாதிகள்  மற்றும் சிலர்  நியூமராலஜி காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ தங்களது வாகனங்களுக்கு பேன்சி எண்களை வாங்குகிறார்கள்.

இதுபோன்ற பேன்சி எண்களைப் பெற வேண்டுமெனில், நாம் சென்னையில் தமிழக அரசின் ஹோம் டிபார்ட்மென்ட் – டிரான்ஸ்போர்ட் செக்ஷனில், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான ஆர்.டி.ஒ. பணத்தைச் செலுத்தி இந்த ஃபேன்ஸி எண்களைப் பெற வேண்டும். ஏற்கனவே பேன்சி எண்களை பெற ரூ.2 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, இது குறைந்த பட்ச தொகை முதல், அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே எண்ணுக்கு பலர் போட்டியிடும்போது, அதன் தொகை அதிகரிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,  தமிழக அரசு 0001 முதல் 9999 வரையிலான 100 வாகன எண்களை சிறப்பு எண்களாக ஒதுக்கி உள்ளது. இந்த பேன்சி எண்கள் பெற ரூ.80 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை சிறப்புக் கட்டணமாக செலுத்தி பெறலாம்.

இந்நிலையில் டி.என். மோட்டார் வாகன விதிகள் 1989-ன் வரைவு திருத்தத்தின்படி பேன்சி எண் கட்டணத்தை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர்த்த உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனால் விரைவில் பேன்சி எண்களுக்கான கட்டணம் இரு மடங்கு உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். . இதன்படி முதல் 4 தொடர்களுக்கு பேன்சி நம்பராக பெற விரும்புபவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் செலுத்தி இருந்தால் இனி மேல் ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டியதிருக்கும். 5 முதல் 8 வரையிலான தொடர்களுக்கு கட்டணம் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1.2 லட்சம் ஆகவும், 9 முதல் 10 வரை எண்களுக்கு கட்டணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்கிறது. 11 முதல் 12 வரையிலான தொடர்களுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகிறது.