சென்னை: அதிமுகவுக்கு சரியான வழிகாட்டி இல்லை என்றும், சரியான வழிகாட்டி இன்றி  அ.தி.மு.க தொண்டர்கள் தவிக்கிறார்கள் என அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ள அன்வர்ராஜா  தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, எடப்பாடி, ஒபிஎஸ் என இரு பிரிவாக உள்ளனர்.  அதிமுகவில் உள்ள மொத்த எம்எல்ஏக்கள் 65 பேரில்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு 61 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளன. ஆனால், ஓபிஎஸ்-க்கு அவரையும் சேர்த்து 3 பேர் மட்டுமே உள்ளனர்.

இந்த நிலையில், இன்று அதிமுக  50வது ஆண்டு நிறைவுபெற்று  51-ம்ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது. எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு தனித்தனியாக விழாவினை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில்  அ.தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கிய செய்தி யாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாஇ  “பிரிந்து நிற்கும் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க வெல்ல முடியும். தலைவர்கள் பிரிந்து நின்றாலும், கிராமப்புறங்களில் உள்ள தொண்டர்கள் அ.தி.மு.க-விலேயே தொடர்ந்து வருகிறார்கள். அவர்கள் சரியான வழிகாட்டுதல் இன்றி தவித்து வருகிறார்கள். அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளால் பொது மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை. இதை சாதகமாக எடுத்துக்கொள்ளும் தி.மு.க-வினர் மக்களுக்காக உழைக்காமல் தங்களின் சுயநலனுக்காக உழைக்கின்றனர்” என்று கடுமையாக விமர்சித்தார்.

அதிமுகவில் சிறுபான்மைப் பிரிவு மாநிலச்செயலாளராக இருந்த அன்வர் ராஜா. இவர் தீவிர ஜெயலலிதாவின் விசுவாசி யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா பக்கம் இருந்த இவர், அவர் சிறைக்குச் சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராகச் செயல்பட்டார். பின்னர் அதிமுகவில் சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் தெரிவித்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 1ந்தேதி அதிமுகவில் இருந்து நீக்குவதாக, ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.