சென்னை
சென்னை பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான மோகன்ராஜ் தனக்கு ரூ.1.76 லட்சம் சொத்து உள்ளதாககுறிப்பிட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலருமான மோகன்ராஜ் அங்கீகாரம் பெறாத கட்சியான ஜெபமணி ஜனதா கட்சியின் அமைப்பாளர் ஆவார். இவர் இதுவரை 12 தேர்தலில் போட்டியிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு மக்களவை தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மோகன்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது வேட்புமனுவில் தன்னிடம் உள்ள சொத்துக்கள் ரூ. 1.76 லட்சம் ரொக்கப்பணம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு உலக வங்கியில் இருந்து பெற்ற ரூ.4 லட்சம் கோடி கடன் பாக்கி உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ரூ.1.76 லட்சம் கோடி என்பது 2 ஜி ஊழல் வழக்கில் குறிப்பிட்ட தொகை ஆகும். ரூ.4 லட்சம் கோடி என்பது உலக வங்கிக்கு தமிழ் நாடு அரசு தரவேண்டிய பாக்கி ஆகும்.
மோகன்ராஜ் இது குறித்து, “வேட்பாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் அனைத்தும் உண்மை என மக்கள் நம்பி வருகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் இவை குறித்து எவ்வித சோதனையும் நடத்துவதில்லை. இதை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் பொய்த்தகவலகள் அளித்துள்ளேன்.
இவ்வாறு தவறான தகவல்கள் பதிவது முதலில் கிரிமினல் குற்றமாக இருந்தது.. ஆனால் கடந்த 2014 ஆம் வருடம் நடந்த தேர்தலில் இருந்து இது சிவில் குற்றமாக மாற்றப்பட்டது. சட்டத்தை இவ்வாறு மாற்றுவது சரி ஆகுமா? சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் இதை பயன்படுத்தி தவறான சொத்து விவரங்களை அளித்துள்ளார்.
வேட்பாளர் தனது மனுவில் சரியான சொத்து விவரங்கள் அளிப்பதில்லை என பல முறை புகார் அளித்தும் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே நான் எனது மனுவில் இவ்வாறு பொய்த் தகவல் அளித்துள்ளேன். இனியாவது தேர்தல் ஆணையம் வேட்புமனுக்களை சரிவர சோதனை செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறு எனது வேட்புமனுவில் தகவல்கள் அளித்துள்ளேன்” எனக் கூறி உள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணையரும் வேட்புமனு ஒப்புதல அதிகாரியுமான அசோக் லாவசா ”வேட்பு மனுக்கள் மிக குறுகிய காலத்திலேயே ஒப்புதல் அளிக்க வேண்டி உள்ளன. ஆகவே முழுமையாக சோதனை செய்ய முடிவதில்லை” என தெரிவித்துள்ளார்.