சென்னை:
10,906 காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://t.co/dhTzM8pqbX என்ற இணைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக போலீஸ் மற்றும் சிறைத் துறையில் 10,906 பணியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சீருடைத் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்தப் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பணிகளுக்கு tnusrb.tn.gov.in என்கிற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 13-ல் எழுத்துத் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு காவல் துறை. சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாகவுள்ள 10.906 + 72 (Bl) காலிப்பணியிடங்களை பொதுத் தேர்வு மூலமாக நிரப்பிடுவதற்கான விளம்பரம் 17.09.2020 அன்று நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசின் விளம்பரத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் விளக்கக் குறிப்புகளை படித்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விபரங்களை சரியாக நிரப்பி அத்துடன் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 10906. துறை வாரியான காலிப்பணியிடங்கள் விவரம் வருமாறு: காவல்துறை: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) 3784 ( இதில் ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்ககைள் 3099), இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டுமே), சிறைக் காவலர் மொத்தம் 119 பணியிடங்கள், இதில் ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7.

தீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்). இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 பெண்கள்) மற்றும் சிறைத்துறை – 10 (பெண்கள்). இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கும் ஊதிய விகிதம் ரூ.18200-52900 ஆகும்.

tnusrb 2020: விண்ணப்பிக்க தகுதி

விண்ணப்பம் செய்கிறவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.

விண்ணப்பிப்போருக்கு இருக்க வேண்டிய வயது வரம்பு பொதுப் போட்டி: 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ( அதாவது, 01.07.1996-லிருந்து 01.07.2002க்குள் பிறந்திருக்க வேண்டும்). பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் (01.07.1994 லிருந்து 01,07,2002க்குள் பிறந்திருக்க வேண்டும்).

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) , பழங்குடியினர் 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும், 29 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (01.07.1991 லிருந்து 01.07.2002க்குள் பிறந்திருக்க வேண்டும்).

இத்தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான கல்வித்தகுதியான 10 ம் வகுப்பினை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது மட்டுமே (Final Provisional Selection) வகுப்பு வாரியாக 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளின் போது 20 சதவீத முன்னுரிமை பின்பற்றப்பட மாட்டாது.

விண்ணப்பதாராரின் 10ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate), பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் பயிற்று மொழி (Medium of Instruction) “தமிழ்” என இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதிருந்தால் விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பில் பயின்ற கல்வி நிறுவனத்திலிருந்து தமிழ் பயிற்று மொழியில் படித்துள்ளார் என்பதற்கான சான்றிதழைப் பெற்று இணையவழி விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழை இணைக்காமல் மேல்நிலை வகுப்பினை அல்லது பட்டப் படிப்பினை தமிழ்வழியில் கற்றதற்கான சான்றிதழை சமர்பித்தால் அச்சான்று 20 சதவீதம் முன்னுரிமை பிரிவில் ஏற்றுக்கொள்ளப்படாது.

எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். எழுத்துத் தேர்வில் பொது அறிவு மற்றும் உளவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். உடற்கூறு அளத்தல் தகுதித் தேர்வேயாகும். எனவே இதற்கு மதிப்பெண் கிடையாது. உடல் தகுதித் தேர்வுக்கும் மதிப்பெண் இல்லை. ஏனெனில் உடல் தகுதித் தேர்வு தகுதித் தேர்வேயாகும். உடல்திறன் போட்டிகளுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிறப்பு மதிப்பெண்கள் 5 ஆகும். ( தேசிய மாணவர்படை சான்றிதழ் (ncc) 2 மதிப்பெண்கள், நாட்டு நலப்பணித் திட்டம் சான்றிதழ் (nss) 1 மதிப்பெண், விளையாட்டுச் சான்றிதழ் 2 மதிப்பெண்கள்).

ஆண்கள் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 170 செமீ உயரம் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 167 செமீ உயரம் தேவை. மார்பு அளவு 81 செமீ அளவும், விரிந்த நிலையில் 86 செமீ அளவும் இருக்க வேண்டும். பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்கள் 159 செமீ உயரம் தேவை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 157 செமீ உயரம் இருக்க வேண்டும்.

ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும்.

tnusrb 2020: விண்ணப்பம் செய்யும் முறை:

தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம். 10,906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13ல் எழுத்துத்தேர்வு நடக்கும். மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது.