சென்னை,
டிஎன்பியூசி குரூப்-1 தேர்வு குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.
குரூப்1 தேர்வு விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறி உள்ளதாகவும் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த ராமதாஸ், இந்த தேர்வு முடிவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்,
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் 19 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 74 முதல் தொகுதி பதவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வில் விடைத்தாட்கள் மாற்றப்பட்டது விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த 28-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.
இந்தக் குற்றச்சாற்றுகளை தேர்வாணையம் மறுத்திருக்கிறது.
விடைத்தாள்களில் பதிவெண் மறைக்கப்பட்டு அதற்கு பதிலாக மாற்று எண் வழங்கப்பட்டு தான் திருத்தும் பணிக்காக அனுப்பப்படுவதாகவும், அதனால் விடைத்தாள்களை மாற்ற முடியாது என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது கடந்த நூற்றாண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் முறை தான். இப்படி செய்தால் விடைத்தாட்களை மாற்ற முடியாது என்பதை மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தை கூட நம்பாது. அதுமட்டுமின்றி, இதுப்போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் தான்.
தேர்வாணையத்தின் அனைத்து செயல்பாடுகளும் அவர்களுக்கு அத்துபடி. அவர்களும், சில தனியார் பயிற்சி நிறுவனங்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு தான் இத்தகைய முறைகேடு களில் ஈடுபடுகின்றனர். தேர்வாணைய முறைகேடுகள் குறித்த எனது குற்றச்சாற்றுகள் உண்மையானவை; அதிலிருந்து பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாட்கள் தேர்வுக்கு சில நாட்கள் முன்பாக விற்பனை செய்யப்படுகின்றன.
வினாத்தாட்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுவ தாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விடைத்தாட்களை மாற்றுவதும் சர்வசாதாரணமாக நடை பெற்று வருகிறது.
இதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரி களுக்கு விடுதிகளுக்கு நட்சத்திர விடுதிகளில் ராஜ உபச்சாரம் நடத்தப் படுகிறது. தனியார் பயிற்சி மையங்களுக்கும், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவுகள் குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும்.
கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட முதல் தொகுதி பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளில் 148 பேர் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களில் 121 பேர் சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு முன் 2014-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் தொகுதி தேர்வில் 25 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். இவர்களில் 23 பேர் அந்த தனிப்பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த காலங்களில் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முன்னணியில் வந்தவர்களில் பலரால் கூட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல் தொகுதித் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.
காரணம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தகுதி மற்றும் திறமைக்கு முக்கியத்து வம் தரப்படுவதும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும் தான்.
2012&ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் தொகுதித் தேர்வில் முதலிடம் பிடித்து மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட மதுராந்தகி என்பவர் தியாகராயர் நகரில் உள்ள குறிப்பிட்ட அந்த பயிற்சி மையத்தில் படித்தவர் தான். அவர் முறைகேடான வழிகளில் தான் தேர்ச்சி பெறச் செய்யப்பட்டு, பதவியில் அமர்த்தப் பட்டார்.
இதற்கு நன்றிக்கடனாகத் தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், ஆளுங்கட்சி வேட்பாளருக்காக பணத்தைக் கடத்திச் சென்றார்.
இதேபோல், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற அனைத்து ஊழல்களுக்கும், விடைத்தாள் மாற்றப்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. தேவையான நேரத்தில் இவற்றை வெளியிடுவோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீது அவதூறு பரப்பவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இதற்கு முன் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவராகவும், செயலாளராகவும் இருந்தவர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர் என்பதை பா.ம.க. அங்கீகரித்திருக்கிறது.
அண்மைக்காலங்களில் பார்த்தால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த காவல்துறை முன்னாள் தலைமை இயக்குனர் நட்ராஜ், நேர்காணலின் போது முறைகேடு நடப்பதைத் தடுக்க நேர்காணல் அரங்கத்தில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தச் செய்தார்.
அதேபோல் 2011-ஆம் ஆண்டில் ஆணையத்தின் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் என்ற இ.ஆ.ப. அதிகாரி மிகவும் நேர்மையான முறையில் செயல்பட்டார்.
அப்போது நடந்த போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்களை தாம் பார்க்க வேண்டும் என்று கோரியும் அவற்றை தமது பார்வைக்கு வைக்காததால், போட்டித் தேர்வுகள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார்.
2012-ஆம் ஆண்டு முதல் தொகுதி தேர்வில் முறைகேடு செய்ய அவர் அனுமதிக்காததைத் தொடர்ந்து அவரை ஆட்சியாளர்கள் இடமாற்றம் செய்து விட்டு, தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி வெளியிட்டனர். இத்தகையவர்களின் நேர்மையை பாராட்டுவதில் பா.ம.க.வுக்கு தயக்கமில்லை.
தேர்வாணையத்தின் இப்போதைய தலைவர் அருள்மொழியும் நேர்மையானவர் தான். ஆனால், அவர் விடுப்பில் சென்ற போது, அவரது பொறுப்பை கவனித்துக் கொண்ட ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரியான இராஜாராம் நம்பகத்தன்மையற்றவர்.
இவர் தமிழ் வளர்ச்சி- செய்தித்துறை செயலாளராக பணியாற்றிய போது அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்களை மிரட்டுவதும், ஜெயாத் தொலைக்காட்சிக்கு செய்தியாளர்களை தேர்வு செய்யும் மனிதவள மேலாளராக செயல்படுவதும் தான் முழுநேரப் பணியாக இருந்தது.
அப்போதே பல்வேறு ஊழல் புகார்களுக்கு உள்ளான இவரது செயல்பாடுகள் எப்போதுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக இருந்ததில்லை. இது தேர்வாணைய ஊழலை உறுதிப்படுத்து கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி முதன்மைத் தேர்வு முடிவுகளை ரத்து செய்துவிட்டு, அதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அத்துடன், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தேர்வாணையத்தின் உறுப்பினர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் வரும் 8-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்தில் முன்னாள் தொடர்வண்டித்துறை அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்வர். பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என விரும்பும் போட்டித்தேர்வர்களும் இதில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.