சென்னை:

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய காவலர்கள் சித்தாண்டி, பூபதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள  டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ  முறைகேட்டில் அரசு அதிகாரிகள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர்  2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த முறைகேடு தொடர்பாக பலரை கைது செய்துள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட காவலர் சித்தாண்டி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயக்குமார் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

இந்த நிலையில், இந்தமுறைகேட்டில், ஈடுபட்டதாக சிவகங்கை பகுதியைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த பூபதி என்ற மற்றொரு காவலரையும் கைது செய்தனர்.

சித்தாண்டியும், பூபதியும் இணைந்து முறைகேடாக இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குரூப்-2ஏ தேர்வு மூலம் ஏராளமானோரை அரசு வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில், மேலும் சில காவலர்கள் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,. காவலர்கள் சித்தாண்டி, பூபதி ஆகியோர் மீது  துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். அதன்பேரில் முறைகேட்டில் ஈடுபட்ட சித்தாண்டி மற்றும் பூபதி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அதிரடி உத்தரவிட்டார்.