சென்னை,
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் 11 பேரை நியமனம் செய்த தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பு கூறியது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, தமிழக கவர்னரால் நியமிக்கப்பட்டவர்கள் இந்த 11 பேரும். அவர்கள் நியமனமே செல்லாது அதிரடியாக ஐகோர்ட்டு அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆரம்பகாலத்தில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக தகுதிவாய்ந்த நபர்களை நிமயனம் செய்து வந்த அரசு, பின்னர் அரசுக்கு ஆதரவானவர்கள், கட்சி உறுப்பினர்கள் என அரசுக்கும், கட்சிக்கும் ஜால்ரா போடுபவர்களையே நியமனம் செய்து வந்தது.
இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சரியான முறையில் வேலை கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே எழுந்தது. அரசு வேலை பெற லஞ்சம் கேட்கப்படுவதாக வும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில் கடந்த ஜனவரி 31ந் தேதி புதிய உறுப்பினராக 11 பேரை அதிமுக அரசு நியமனம் செய்தது . அவர்கள் விவரம் வருமாறு:
முன்னாள் மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், பொறியியல் கல்லூரி முதுகலை பட்டதாரி பி.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், முன்னாள் அரசு அதிகாரி புண்ணியமூர்த்தி, வக்கீல்கள் பிரதாப்குமார், சுப்பையா, முத்துராஜ், சேதுராமன், பாலுசாமி, மாடசாமி ஆகிய 11 பேர்.
இவர்கள் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தகுதியில்லாத நபர்களை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது. இவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே சாதியை சேர்ந்த பலரும் இதில் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், இவர்களது நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் வழங்கிய அதிடி தீர்ப்பில் கூறப் பட்டிருப்பதாவது:
அரசு பணிக்கு நேர்மையானவர்கள், திறமையான வர்களை தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் பணி யாகும். அப்படிப்பட்ட தேர்வு பணியை மேற்கொள்ளும் டிஎன்பிஎஸ்சியின் தலைவர், உறுப்பினர்கள் ஒழுக்க முள்ள, நேர்மையான நபர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு நியமிக்கப்படும் உறுப்பினர்களுக்கு அரசிய லமைப்பு சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது. அப்படிப்பட்ட பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது முறையான விதிமுறைகளை கடைப்பிடித்திருக்க வேண்டும்.
ஆனால், 11 உறுப்பினர்கள் நியமனத்தில் அவர்களது பயோடேட்டா மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு அம்சத்தையும் பரிசீலிக்கவில்லை. அவசரகதியில் நியமனம் நடைபெற்றுள்ளது.
இந்த 11 உறுப்பினர்கள் பதவி 2013ம் ஆண்டு முதல் காலியாக இருந்தது. 3 ஆண்டுகளாக இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவசர கதியில் இந்த காலிப்பணியிடங்கள் எல்லாம் நிரப்பப்பட்டுள்ளது.
இந்த உறுப்பினர்கள் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த 11 பேரின் பயோடேட்டாவை மட்டுமே பிரதான ஆவணங்களாக பரிசீலனை செய்து, தமிழக ஆளுநரும் நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வேறு எந்த ஒரு ஆவணங்களும் இந்த நியமனத்தில் பரிசீலிக்கப்படவில்லை.
அதுவும் இந்த பரிசீலனை ஜனவரி 30ம் தேதி சனிக்கிழமை நடந்துள்ளது. மறுநாள் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11 பேரையும் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் நியமனம் அரசு விடுமுறை நாட்களில் இந்த நடவடிக்கை எல்லாம் நடந்துள்ளது.
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன், 11 உறுப்பினர்களும் பிப்ரவரி 2ஆம்தேதி அவசரமாக பதவியையும் ஏற்றுக்கொண்டனர்.
11 பேர் குறித்து போலீஸ் ரகசிய விசாரணை உள்ளிட்ட அனைத்து பணிகளும் 24 மணி நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி முன்னாள் மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி குறித்து சரிவர விசாரிக்கப்பட வில்லை. அவர் மீது சில மாறுபட்ட கருத்து இருந்ததால், 58 வயதுக்கு பின்னர் நீதிபதி பணியை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
ஆகவே, டிஎன்பிஎஸ்சியின் 11 உறுப்பினர்கள் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை. இவர்களது நியமனம் செல்லாது. இந்த நியமனத்தை ரத்து செய்கிறோம்.
இவர்களை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமித்து கடந்த ஜனவரி 31ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்கிறோம்
என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.