மதுரை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2019 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வானது தமிழ்நாட்டில், 5575 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியானபோது, ஒரே மையத்தில் தேர்வு எழுதிய பலர் தேர்ச்சி பெற்றனர். மேலும், குறிப்பிட்ட மையத்தில் படித்தவர்களே அதிக அளவில் தேர்ச்சி அடைந்தனர். இது சர்ச்சையானது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தது. சிலர் கைதும் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை நீதிபதிகள் அமர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிசிஐடி காவல்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும்,வழக்கை நேர்மையாகவும்,விரைவாகவும் விசாரித்து,தேர்வு முறைகேடு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவு நகல் கிடைத்தவுடன் சிபிஐ தரப்பில் விசாரணை தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.