சென்னை:

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி தலைமறைவாக இருந்த நிலையில், இன்று சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது  டிஎன்பிஎஸ் தேர்வு முறைகேடுகள்.  குரூப்4 மட்டுமின்றி குரூப்-2 தேர்வில் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இந்த நிலையில்,  டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரான எழிலகத்தில் உதவியாளராக பணி செய்து வந்த பெண் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் காவலர்   சித்தாண்டி மூலம் பணம் கொடுத்து வேலை பெற்றது தெரிய வந்தது. இவரது குடும்பத்தில் அனைவரும் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, சித்தாண்டியை கைது செய்ய  சிபிசிஐடி போலீஸார் தேடிய நிலையில், அவர் தலைமறைவாகி இருந்தார்.

அவர் மீது, கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சித்தாண்டி மற்றும் அவரது மனைவியின் வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிவகங்கை பகுதியில் காவலர் சித்தாண்டி கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.